இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது..
இந்நிகழ்வினில் இயக்குநர் பிரித்திவிராஜ் பேசியதாவது…
என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான நிகழ்வு, முதல் பாகம் வந்த போது இப்படத்தை இந்திய அளவில், வெளியிடும் வசதி, படத்தைப் பற்றிப் பேச வைக்கும் வசதி இல்லை. இந்த 6 வருடத்தில் பல விசயங்கள் மாறியிருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அவரவர் மொழியில் ரசிக்கும் வண்ணம் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப்படம் மலையாள சினிமாவின் பெருமை, இப்படி ஒரு படம் செய்யக் காரணமான மோகன்லால் சார், ஆண்டனி பெரும்பாவூர் சார் ஆகியோருக்கு நன்றி. அனைவரும் படம் பார்த்து ரசியுங்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.
நடிகர் மோகன்லால் பேசியதாவது…
இது ஒரு டிரையாலஜி படம், லூசிஃபர், இப்போது எம்புரான் அடுத்து இன்னொரு படம் வரவுள்ளது. இது மலையாள சினிமாவுக்கே மிக முக்கியமான படம். கொஞ்சம் புதுமையாகப் பல விசயங்கள் முயற்சி செய்துள்ளோம். அதற்காகத் தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இது தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாதிரி படம் ஓடினால் தான் பல பெரிய படங்கள் வரும். அதற்காகவும் இப்படம் ஓட வேண்டும். உங்களைப் போல நானும் மார்ச் 27 ஆம் தேதி, ரிலீஸுக்கு காத்திருக்கிறேன் நன்றி.
நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக, பான் இந்தியப் பிரம்மாண்ட படமாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது.
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அபிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, கிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.
இப்படம் உலகம் முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான பான் இந்திய வெளியீடாக வெளியாகிறது “எம்புரான்” திரைப்படம். இந்தியில் புகழ்பெற்ற நிறுவனமான ஏஏ பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை இந்தியில் வெளியிடவுள்ளது.
இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிரப்பார்ப்பை எகிறவைத்துள்ள இப்படத்தினை, 2025 மார்ச் 27 அன்று, வெள்ளித்திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!