நம் நாட்டில் மட்டும் தான் போராடுபவர்கள் விநோதமாகவும் விதவிதமாகவும் பார்க்கப்படுகிறார்கள். மதுவிற்கு எதிராக போராடி உயிர்நீத்த சசிபெருமாள் சாகும் வரை யாராலும் அங்கீகரிக்கப்பட வில்லை. இப்படி நிறைய மரணங்களைச் சொல்லலாம். இங்கு போராட்டத்தை கலைவடிவத்தில் கொடுத்தாலும் அதில் கமர்சியல் இருக்கிறதா என்று பார்க்கும் உலகம் இது. இருந்தாலும் தரமான படைப்புகள் தங்களை தற்காத்துக் கொள்ளும். ஞானச் செருக்கு அப்படியான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை நேற்று நடந்த அப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தெரிந்தது.
கெளதமன், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றியும், போராட்டக் கலைஞன் வீர சந்தானம் பற்றியும் பேசினார்கள். படத்தின் ட்ரைலரும் படம் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது. இப்படத்தை தரணி ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.
ட்ரைலரில் வீர சந்தானத்தை ஓய்வு எடுங்கள் என்று சொல்கிறார்கள். அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதால் அந்த வசனம் வலிக்கிறது.