இமையம் எழுதும் பெருங்கதை , சிறு கதை எதுவாக இருந்தாலும் பெரிய உணர்ச்சிக்குள் நம்மைத் தள்ளத் தவறுவதே இல்லை
சாவு சோறு என்ற கதையில் துவங்கி, வரம் என்ற கதையோடு முடியும் இந்த நூல் 9 சிறுகதைகளை கொண்டது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் ஈர்த்தது என்றால், நெடுநேரம் அசைப்போட்டது, “திருட்டுப் போன பொண்ணு” என்ற கதையும், பரிசு கதையும்
ஒரு பொண்ணு சடங்காவுனா அவளை ஊருல ஒரு இடம் ஒதுக்கி ஒரு குச்சில் போட்டு தனியா தங்க வைப்பாங்க தீட்டு கழியுற வரைக்கும். இது ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமாம். அப்படி ஒதுக்குப் புறமா வைக்கிற பொண்ணு ஒன்ன நாலுவேரு தூக்கிட்டு போய்றானுவ. நாலு நாள் கழிச்சி கொண்டாந்து வுட்டுட்டு ஓடிப்பேர்றானுவோ. ஒருத்தனும் ஒன்னும் பண்ணல. ஆள மாத்தி தூக்கிட்டோம்னு அவட்ட மட்டும் சொல்லிட்டு ஊருக்குத் தெரியாம தப்பிச்சிடுறாங்க. அப்புறமா அவள ஊரு திருட்டுப் போன பொண்ணுன்னு சொல்லுது. கஷ்டகாலம் அவ கிழவியாகுற வரைக்கும் அந்தப் பேரு நிலைக்குது. அந்த பேரு கிடைச்ச சாபம் தான் காலம் வரைக்கும் அவளுக்கு கல்யாணமும் ஆகாம போய்டுது. அவளுக்கு ஏன் கல்யாணம் நடக்கல, காலம் வரையிலும் அவ ஏன் எந்த ஆம்பளை கூடயும் சேரலன்றது மொத்தக்கதையா விரியுது. கனம் நிறைஞ்ச கதை அது. எனக்கு எங்கூர்ல சடங்கு ஆகாமலே 60 வயசு வரைக்கும் இருந்து செத்துப் போன மயிலத்தையும், 65-ஐ தாண்டி மாலை பாக்கியம் இல்லாம இப்பமும் வாழ்ந்துட்டிருக்க ஊமத்தையும் கண்ணு முன்னாடி வந்தாங்க
பரிசு கதை ஒத்த வார்த்தையில உசுரு போவும் வரும்னு சொல்லிச்சிது. “அந்தப் பயச் சொன்ன ஒரு வார்த்தயில என் ஈரக்கொல அடங்கிட்டுடே” னு சொல்லி உடைஞ்சி போன எத்தனையோ பெரியாட்களைப் பாத்துருக்கேன். இந்தப் பரிசு கதையில ராமசாமிக்கு வார்த்தை கொடுத்த பரிசு கொடுமையா இருக்கும்.
இதமா சொல்ற ஒரு வார்த்தை சொன்ன நமக்கே வரமா அமையும். அதனால காயப்படுத்தாத வார்த்தைவ காலத்த காக்கும்னு கத்துக்கிட்டேன் பரிசு கதையில
ஒரு புத்தகத்தை நாம திறந்தா அந்தப் புத்தகம் நமக்குள்ள எதையாவது திறக்கணும். இந்த சாவு சோறு நிச்சயம் திறக்கும்