2018ம் ஆண்டிற்கான தேசிய விருதை வென்ற தமிழ் திரைப்படமான பாரம் திரைப்படத்தை வெற்றிமாறன் தனது பேனரில் வெளியிட இருக்கிறார். இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில் “ஒரு பிரச்சனையை மிகமிக நேர்மையாக அணுகும் திரைப்படங்களை பார்ப்பது என்பது மிக மிக அரிதான விசயமாக மாறி வருகிறது. தேசிய விருதை வென்ற இத்திரைப்படத்தை மும்பையைச் சேர்ந்த ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கியிருக்கிறார். வயோதிகம் அடைந்த பெரியவர்களை அக்குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களே தலைக்கூத்தல் முறைப்படி கொலை செய்வதை இப்படம் மிகச்சிறப்பாக பதிவு செய்திருக்கிறது. மேலும் நம்மை சுற்றியிருக்கும் இந்த உலகைப் பற்றிய நம்முடைய அக்கறை மற்றும் நமது அலட்சியமான இயல்பை இப்படம் அம்பலப்படுத்துகிறது. தீவிரமான புதிரான கதைக்களனைக் கொண்டுள்ளது. இப்படத்தைப் பார்த்த போது, ஏதோவொரு வகையில் இப்படத்தின் பகுதியாக நான் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்..” என்று தெரிவித்துள்ளார். இதே கதைக்களனை அடிப்படையாகக் கொண்டு மதுமிதா இயக்கிய கே.டி.கருப்புத்துரை திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.