‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக பரிமாணம் எடுத்தவர் எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி. ‘மதயானைக் கூட்டம்’ ‘கொம்பன்’ ‘பாயும் புலி’ எனப் பல படங்களில் நடித்திருக்கும் வேல.ராமமூர்த்தி இப்பொழுதும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பதிவில் “நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்புஎழுதிய நாவல்களான பட்டத்து யானை, குருதி ஆட்டம், அரியநாச்சி, குற்றபரம்பரை போன்ற நாவல்கள் வார, மற்றும் இருவார இதழ்களில் தொடராக வெளிவந்து வரவேற்ப்பைப் பெற்றதோடு, நாவல்களாகவும் வெளியாகி பல்லாயிரம் பிரதிகள் விற்று தீர்ந்தவை. அந்த நாவல்களின் தலைப்பை படத்தின் தலைப்பாக சில இயக்குநர்கள் என் அனுமதி இன்றி தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். ‘பட்டத்து யானை’ ஏற்கனவே படமாகிவிட்டது. குருதி ஆட்டம் என்ற தலைப்பு இப்பொழுது படமாகி வருகிறது. அரியநாச்சி வேறுவொரு வடிவில் மாறவிருப்பதாக தெரிகிறது. என் தலைப்பை என் அனுமதி இன்று பயன்படுத்தும் இயக்குநர்களே, “இந்த நாவல்கள் எல்லாம் என்னுடைய எத்தனை ஆண்டுகால உழைப்பை உறிஞ்சியவை என்று தெரியுமா..? நீங்கள் இண்டு இடுக்குகளில் நுழைந்து தப்பித்துக் கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கலாம். ஆனால் கொஞ்சமாவது இது போன்ற செயல்கள் உங்களது மனதை உறுத்த வேண்டும். அப்படி உறுத்தினால் உருப்படுவீர்கள்..” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.