‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதை வென்ற இயக்குநர் மாரி செல்வராஜ். அவர் தற்போது தனுசை நாயகனாக வைத்து ‘கர்ணன்’ படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படம் திருநெல்வேலி பகுதிகளில் சில ஆண்டுகள் முன்பு நடந்த சாதிச் சண்டைகளைப் பற்றி பேச இருப்பதாக தெரிகிறது. இதனைத் தெரிந்து கொண்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தங்கள் சமூகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தினால் தலையை வெட்டுவோம்’ என்று தனுஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு செயலரும், திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயருமான பவானி வேல்முருகன் திருநெல்வேலி போலீஷ் கண்காணிப்பாளரிடம் இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்யக் கோரி மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் 1991ல் மணியாச்சி கொடியன்குளம் சாதிக் கலவரத்தை மையப்படுத்தி ‘கர்ணன்’ திரைப்படத்தை எடுத்து வருவதாக தெரிகிறது. மேலும் இதில் தேவர் சமூகத்தை தாக்கி பல காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. இப்படம் வெளியானால் அமைதி பூமியாக நிலவும் தென் தமிழகத்தில் மீண்டும் சாதி மோதல்கள் உருவாகும். இதனால் இது போன்ற சாதிக் கலவரத்தினை தூண்டும் நோக்கில் படம் எடுக்கும் இயக்குநர் மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.