இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ராஜமுந்திரி சிறைச்சாலைகளில் நடைபெற்று முடிந்திருந்தது. நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சைக்காக சில மாதங்கள் தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது மீண்டும் சென்னை, பூந்தமல்லி பகுதியை அடுத்த நாசரேத்பேட்டைப் பகுதியில் இருக்கும் ஈ.வி.பி பொழுதுபோக்குப் பூங்காவில் வைத்து நடைபெற்று வருகிறது. நேற்று பாடல் படப்பிடிப்பிற்காக பெரிய அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பொழுது ராட்சச கிரேன் ஒன்று அறுந்து விழுந்தத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். மற்றும் பலர் காயமடைந்தனர்.
பலியானவர்கள் விபரம் ; உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் ஆவர். விபத்து குறித்து டிவிட்டரில் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், “எத்தனையோ விபத்துக்களை சந்தித்து கடந்து இருந்தாலும் இந்த விபத்து மிகக்கொடூரமானது. எனது மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியைவிட அவர்களை இழந்த குடும்பத்தாரின் வலி பன்மடங்கு இருக்கும்.
அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார். காயமடைந்த நபர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு, மருத்துவரிடம் அவர்களின் காயம் குறித்து விசாரித்துள்ளார்.