மம்முட்டியின் மகனும், மலையாளத் திரையுலகின் தவிர்க்க முடியாத மிகப்பெரும் நாயகர்களில் ஒருவருமாக திகழ்பவர் நடிகர் துல்கர் சல்மான். அவருக்கு தமிழில் மிகப்பெரிய வெற்றிப்படங்கள் ஏதும் அமையாமல் இருந்தது. ‘ஓ காதல் கண்மணி’ ‘மகாநதி’ போன்ற படங்கள் கூட அவரின் நடிப்பு பாராட்டப்பட்டப் போதும் அவருக்கான இடம் கிடைத்ததா.,.? என்றால் அதற்கு பதில் இல்லை என்பது தான். ஆனால் சென்ற வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் அந்த இடத்தை தமிழில் துல்கருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இப்படத்தின் இயக்குநரான தேசிங்கு பெரியசாமியின் நண்பரும், இப்படத்தின் ஒளிப்பதிவாளருமான கே.எம். பாஸ்கரன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்துக் கூறும் போது, “இப்படத்தின் கதையை நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டோம். கதை பிடித்திருக்கிறது. ஆனால் கால்ஷீட் இல்லை. இரண்டு ஆண்டுகள் காத்திருக்க முடியுமா..? என்று கேட்டார். நாங்களும் காத்திருந்தோம். பின்னர் அவரே கூப்பிட்டு சூட்டிங் போகலாமா..? என்று கேட்டார். எங்களால் தயாரிப்பாளரைப் பிடிக்க முடியவில்லை என்று கூறினோம். அவரே தயாரிப்பாளரை ஏற்பாடு செய்து கொடுத்து, பட்ஜெட் குறித்து கவலைப்பட வேண்டாம். படத்தை நினைத்தபடி எடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார். மேலும் படத்தை தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளில் எடுக்கும் முடிவுடன் இருந்தோம். துல்கர் தான், “மலையாளிகள் அனைவருக்குமே தமிழ் புரியும். அதனால் ஏன் வீண் செலவு. தமிழில் மட்டும் எடுங்கள்” என்று தெளிவுடன் கூறினார். அவரால் தான் தற்போது இப்படம் வெளியாகியிருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.