இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யாமேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “சைக்கோ”. இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. மேலும் சிலர் படத்தில் வரும் சில காட்சிகளைக் குறிப்பிட்டு படத்தில் எந்தவொரு லாஜிக்கும் இல்லை என்பது போல் சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். இதற்குப் பதிலளித்துப் பேசிய மிஷ்கின், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஒரே விதமான கேள்வியை 40 விதமாக கேட்டுவிட்டார்கள்.
நானும் அவர்களுக்கு சளைக்காமல் பதில்கூறி வருகிறேன். லாஜிக் இல்லை..? என்கிறார்கள். மிகப்பெரிய காவியமான இராமாயணத்திலேயே லாஜிக் இல்லை. ராவணன் தூக்கிச் சென்றது அடுத்தவனின் மனைவி. இருப்பினும் அவன் தரப்பில் நியாயம் இருப்பதாக எண்ணிக் கொண்டு அவன் போர் புரிகிறான். இராமன் பக்கம் தான் நியாயம் இருக்கிறது என்று தெரிந்தும், தன்னை வளர்த்தவர் என்கின்ற காரணத்தினால் இராவணனுடன் இருந்து இராமனை எதிர்த்து உயிர்விடத் துணிகிறான் கும்பகர்ணன்..” இதில் லாஜிக் இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மிஷ்கின். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.