பின்னணி பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் அறியப்பட்ட சின்மயி, சென்ற ஆண்டில் “மீ டூ” விவகாரம் இந்தியா முழுக்க விஸ்வரூபம் எடுத்த பொழுது, அதில் பங்கேற்றதோடு மட்டுமன்றி, பிரபல பாடலாசிரியர் வைரமுத்து-வின் மீது பாலியல் குற்றம் சுமத்தினார். மேலும் பிற நடிகைகள் அவர்களின் மீடூ விவகாரம் தொடர்பாக சில நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த போது, அது தொடர்பான பதிவுகளை ஷேர் மற்றும் ஃபார்வர்டு செய்ததோடு, அவர்களுக்கு தனது ஆதரவையும் வழங்கினார். இது போன்ற நடவடிக்கைகளால் தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதற்கு ஆண்டு சந்தாவை சரிவரக் கட்டவில்லை என்று காரணம் கூறப்பட்டது. ஆனாலும் தென்னிந்திய டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் ராதாரவி மீதும் மீ-டூ குற்றம் சுமத்தியவர் சின்மயி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சின்மயி தொடர்ந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் டப்பிங் பேசத் தொடங்கியிருக்கிறார் சின்மயி. மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் “ஹீரோ” படத்தில் நாயகி கல்யாணியின் குரலுக்கு டப்பிங் பேசியுள்ளார் சின்மயி. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் தன் கருத்தை இப்படி பதிவு செய்திருக்கிறார். ”ஒரு ஆண்டும் சில நாட்களும் கடந்த பிறகு மீண்டும் டப்பிங் பேசி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் மித்ரனுக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் தான் நிஜ ஹீரோக்கள்..”