‘காக்கா முட்டை’ ‘ஆண்டவன் கட்டளை’ ‘குற்றமே தண்டனை’ ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் மணிகண்டன். இவர் தற்போது ‘கடைசி விவசாயி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்க முதலில் ரஜினிகாந்தை படக்குழுவினர் அணுகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘கடைசி விவசாயி’ படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை இசையமைப்பாளர் இளையராஜா மேற்கொண்டு வந்தார்.
தற்போது அவர் அமைத்துக் கொடுத்த பின்னணி இசை திருப்திகரமாக இல்லை என்றும், தனக்கு வேண்டிய இசையை தன்னால் கேட்டு, இளையராஜாவிடம் இருந்து வாங்க முடியவில்லை என்றும் கூறி, மணிகண்டன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை தேடிச் சென்றிருக்கும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே விவசாயம் தொடர்பான படமாக உருவாகி வரும் ‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை அமைத்து வருவதால் முதலில் ‘கடைசி விவசாயி’ படத்திற்கு இசையமைக்க சந்தோஷ் நாராயணன் தயங்கியதாகவும், பின்னர் கதையைக் கேட்ட பின்னர் இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.