உலகெங்கும் உள்ள நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. இந்தியா முழுக்க எல்லாவிதமான தொழில்துறைகளும் முடங்கி இருக்கும் சூழலில் தியேட்டர்கள் கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் முழுவதும் மூடப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தில் எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 31 வரை படப்பிடிப்புகள் போன்ற அனைத்துவித சினிமா தொடர்பான வேலைகளும் நிறுத்தப்படும் என்று பெப்சி சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் குஷ்பு இது குறித்து ஒரு கருத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், “நம்மால் இது பொதுமக்களுக்குப் பரவியது என்ற குற்றச்சாட்டு வரக்கூடாது. கன்னட, மலையாளத் திரையுலகைப் போல தமிழிலும் திரைப்படத்துறை மார்ச் 31 வரை இயங்காது என்கின்ற அறிவிப்பு வரவேற்க வேண்டியது. ஏனென்றால் நம்மைக் கைகாட்ட 100 பேர் எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.” என்று பதிவிட்டுள்ளார்.