கருத்தியல் ரீதியாக அணுகினால் அழுகிப்போகிற அளவிற்கு அபத்தம் இருக்கு. அபத்தமாவே இருந்தாலும் அழகியல் இருந்தா ஓ.கே தான் என்பவர்களுக்கு அர்ஜுன் ரெட்டி போதுமானது. ஆதித்ய வர்மாவில் அந்த அழகியலும் மிஸ்.
பெரும் ஆறுதல் துருவ் விக்ரம். நடிப்பு அழகு இரண்டிலும் கெத்து. குறிப்பாக கண்களும் குரலும் போட்டிபோட்டு நடிக்கின்றன. வாழ்த்துகள் ப்ரோ.
கோவக்கார மருத்துவ இளைஞனின் ‘வெறி’கொண்ட அன்பும் அதனால் வரும் வம்பும் தான் கதை. முதல் கால் மணி நேரம் காஸ்டிலியான சீரியல் பார்த்த உணர்வு வந்தது உண்மை. இடைவேளை சீக்வென்ஸில் ஒரு சீரியஸ் லவ் படம் பார்த்த பீல் வந்ததும் உண்மை.
பனிதா சந்து நடிப்பதை விட சின்ன சந்து கிடைத்தாலும் துருவ் விக்ரமின் உதட்டைக் கடிப்பதில் குறியாக இருந்து அதைச் செவ்வனே செய்கிறார். ஒரு பெண்ணைப் பார்த்ததும் நாயகன் அவளின் சம்மதம் என்ன என்பதை கேட்காமலேஅவள் கன்னத்தில் முத்தம் கொடுப்பதெல்லாம் நேர்கொண்ட அயோக்கியத்தனம் அல்லவா? ஆனால் ஹீரோ அதைச் செய்கிறார். ஹீரோயின் அதற்கு எவ்வித எதிர்வினையுமின்றி சிலை போல நிற்கிறார். டைரக்டர் டச்!!!
“நீ ஸ்டெல்லா மேரி காலேஜ் வாசல்ல நின்னன்னா க்யூவுல வருவாளுங்கடா” என்ற வசனம் வந்தபோது காதல் மன்னன் பட காலத்தில் இருப்பதாக உணர்வு. நேர்கொண்ட பார்வை, மிகமிக அவசரம், போன்ற பெண்ணியம் சார்ந்த படங்கள் வரும் நல்லவேளையில் இப்படியான வசனங்களை வைத்து அந்தப்படம் தந்த தாக்கத்தை நீர்த்துப் போகச் செய்வது நியாயமா?
படத்தின் இசையை அப்படியே காபிபேஸ்ட் செய்ததாக கேள்வி. பேஸ்டில் பெரிதாக டேஸ்ட் இல்லை. ஒளிப்பதிவு தரமாக அமைந்த அளவிற்கு எடிட்டிங்கும் தரமாக இருந்திருக்கலாம். நீலப்படம் போன்ற முத்தங்கள் இருந்தாலும் ரொம்ப நீளப்படமாக இருக்கு என்ற சத்தத்தையும் தியேட்டரில் கேட்க முடிந்தது.
நடிகர்களின் பங்களிப்புகளில் பெரிய குறை இல்லை. துருவ் விக்ரமிற்கு நடிகராக இது நல்ல அறிமுகம். படமாக எப்படி என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். குறிப்பாக 2K கிட்ஸ் கொலவெறியோடு கொண்டாடவும் வாய்ப்பு இருக்கு. ஏன்னா பார்த்ததும் லவ்..அடுத்த பத்து நிமிடத்தில் பெட் என அவர்களுக்கான ‘மேட்டர்’ நிறைய இருக்கே. பர்சனலாக நமக்கு படத்தை இன்னொரு முறை பார்க்க ஆசை. பாலாய் ஓடும் ஆதித்ய வர்மாவை அல்ல. பாலா எடுத்து பாழாப்போன வர்மாவை!