கேங்கர்ஸ்- விமர்சனம்
சுந்தர் சி யின் காமெடி யுனிவர்ஸ் கேங்கர்ஸில் இணைந்துள்ளது
பள்ளி.ஆசிரியை ஆன கேத்ரின் தெரசா தன் பள்ளியில் ஒரு மாணவி காணாமல் போனதை முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்கிறார். மேலும் பள்ளி நடக்கும் அவ்வூரில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல தீய செயல்களும் நடக்கிறது. செய்பவர்கள் மைம்கோபியும் அருள்தாஸும். இதையும் தனது புகாரில் கேத்ரின் தெரசா இணைக்கிறார். இவற்றை விசாரிக்க ஒரு அண்டர்கவர் போலீஸ் நியமிக்கப்படுகிறார். கூடவே இந்தப் பள்ளியில் பி.டி மாஸ்டராக சுந்தர் சி என்ட்ரியாக அடுத்தடுத்து என்ன நடக்கிறது? என்பதை காமெடி தெறிக்கத் தெறிக்கத் தந்துள்ளனர்
கதையின் நாயகனாக சுந்தர் சி. தானே டைரக்டர் என்பதால் தன் நடிப்பிற்கு ஏற்றபடி தனது கதாப்பாத்திரத்தை வடிவமைத்துள்ளார். மிகவும் கச்சிதமாகப் பொருந்துகிறார். படத்தின் முன்பாதியில் காமெடியில் டிபன்ஸ் ஆடும் வடிவேலு, இரண்டாம் பாதியில் பழைய CSK டீம் போல அடி வெளுத்துள்ளார். குறிப்பாக வெவ்வேறு கெட்டப்களில் வந்து அவர் செய்யும் அலப்பறைகளில் எல்லாம் தியேட்டர் சிரிப்பரங்கமாக மாறுகிறது. அருள்தாஸ், மைம்கோபி, ஹரிஸ் பேரடி சீரியஸ் முகம் காட்டுகிறார்கள். கதைக்கான கதாநாயாகியாக கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் கேத்ரின் தெரசா. முனிஷ்காந்த், பக்ஸ் உள்ளிட்ட சிலரும் காமெடியில் கவனிக்க வைக்கின்றனர்
சத்யாவின் இசை எல்லாக் காட்சிகளிலும் கலகலப்பை கூட்டுகின்றன. பாடல்களும் ஒகே ரகம். ஒளிப்பதிவில் படத்தின் தரத்தை சிறப்பாக மேம்படுத்தியுள்ளார் கேமராமேன். படத்திற்கு வசனங்கள் பெரும்பலமாக அமைந்துள்ளது
மிகவும் சீரியஸ் ஆன கதையைக் கூட இப்படியொரு ப்ளோவில் சொல்ல முடியும் என்றால் அது சுந்தர் சியால் தான் முடியும். சற்சில லாஜிக் மீறல்களை கூட தனது மேஜிக்கான திரைக்கதையால் செப்பனிட்டுள்ளார். முன்பாதியில் நம்மை சற்று ரிலாக்ஸ் செய்யவிட்டு, இரண்டாம் பாதியில் என்சாய் செய்ய வைத்துள்ளார். இந்த சம்மருக்கான வின்னர் நான் தான் என டிக் செய்துள்ளது இந்த கேங்கர்ஸ்
3.5/5
-வெண்பா தமிழ்