நகவெட்டிக்கும் நகைப்பெட்டிக்கும் வித்தியாசம் இருக்குன்றதை நயன்தாரா போன்றவர்கள் உணரவேண்டும் என்பதற்கான பாடம் தான் ஐரா.
ஒரு குறுகுறு விசயத்தைப் பிடித்து விறுவிறு குறும்படமாக எடுத்துவிடலாம். ஆனால் அதையே பெரும் படமாக பண்ணவேண்டுமானால் ஒன்று பரிச்சயம் வேண்டும், அல்லது பரிச்சயமானவர்கள் பக்கத்தில் இருக்க வேண்டும். கொன்றவர்களைப் பழி வாங்கும் பேய்க்கதைகளை பேய்த்தனமாக பார்த்தவர்கள் தான் நாம். அதற்காக அதை இந்த 2019-லும் ‘கதவு ஆடினால் பயம் வரும்’ என்று இயக்குநர் சர்ஜன் நம்பித் தொலைச்சிருக்கிறாரே!!
அழகாக இருக்கிறார் என்று ஆறுதலாகச் சொல்லிக்கொண்டாலும் நடிப்பில் நயன்தாரா குறையே வைக்கவில்லை. பவானியாக வரும் கருப்பு நயன்தாரா பல இடங்களில் சிறப்பு நயன்தாரா. ஒரு படத்தைத் தன்னந்தனியாக தோளில் தூக்கிச் சுமக்கும் அவருக்கு ஐரா திரைக்கதை சுமக்க முடியாத பாரம் என்பது அவர் கேரக்டர்களின் தடுமாற்றத்தில் தெரிகிறது. ஒரு கேரக்டரின் குணாதியசங்கள் மாறுவதற்கான காரணம் வலிமையாக இல்லாவிட்டால் படமும் வலிமையாக இருக்காது தானே!
கலையரசன் படத்தில் நிலையரசனாக ஒரே மாடுலேசனில் பேசினாலும் நடித்தாலும் மனதில் பதிகிறார். கோ.கோ- படத்தில் காமெடி காட்சிகளில் சில்லறையைத் சிதறவிட்ட நயன் யோகி காம்போ இதில் போகிப்புகையாக நசநசத்து கிடக்கிறது.
பாட்டியின் பொள்ளாச்சி பங்க்ளாவில் நயன்தாராவை பயமுறுத்தும் பேய்தான் சென்னையில் கலையரசனுக்குத் தெரியும் படி பல கொலைகளைச் செய்கிறது. பேய், நயன், கலை இவர்கள் மூவருக்கும் என்ன கனெக்டிங் என்பது தான் கதை. இதில் இடைவேளைக்குப் பிறகு வரும் பேய் ப்ளாஸ்பேக்..அதாவது கருப்பு நயன்தாராவின் பின்கதை அபாரமான முயற்சி. அதுவும் ஒரு இடத்தில் ட்ராமாவாக மாறிவிடுகிறது. முக்கியமாய் அந்தக் கதாப்பாத்திரத்தின் ஸ்திரத்தன்மை முடிவில் படுத்தேவிட்டனாய்யா ரேஞ்சுக்கு பஞ்சராகி விடுகிறது.
கேமரா கோணங்கள் நிறைய டாப் ஆங்கிள்களை காட்டி உசுப்பேத்த முயற்சித்தாலும் முயற்சிக்கான வெற்றி படத்தில் அழகாக தெரிகிறது. சில இடங்களில் பின்னணி இசை அசத்தல். பாடல்களில் கவிஞர் தாமரை எழுதிய மேகதூதம் பாடல் நல்லிசை. வரிகளும் அழகு. எடிட்டரை இன்னும் எடிட் செய்ய விட்டிருக்கலாம்.
சக மனிதனை, மனிதியை நிறம் சார்ந்தோ ராசி என்ற மூட நம்பிக்கை சார்ந்தோ நாம் அவமதிக்கும் அந்த சொற்ப நேரம் அவர்கள் வாழ்க்கையை எவ்வளவு கெட்டநேரமாக மாற்றி விடுகிறது என்பதை தான் படம் பேச வருகிறது. ஒரு நல்ல விசயத்தை நல்லா பேசி இருக்கலாமேய்யா!
நயனிச வாதிகளுக்கு மட்டும் ஐரா எளிமையான விருந்து
மற்றவர்களுக்கு ‘எச்சரிக்கை’ விருந்து!