பர்ஸ்ட்டே ஒரு பாசிட்டிவ் மேட்டர் என்னன்னா விக்ரமிற்கு இது ஒரு வெற்றிப்படம். அந்த வகையில் கடாரம் கொண்டான் வெற்றிகண்டான்!
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடலாம். ஆனால் திரைக்கதையில் கமல் மாதிரி ட்வீட் போடலமா? இப்படி ஒரு கேள்வி கடாரம் கொண்டான் கதையைச் சரியாச் சொல்லச் சொன்னா எழும். ஆனால் அதுவல்ல விசயம். இயக்குநர் ராஜேஷ் ம செல்வாவின் அட்டகாச மேக்கிங் தான் விசயம்.
ஓப்பனிங் ஷாட்டில் வரும் ஹாலிவுட் தரம் படத்தின் பினிஷிங் ஷாட் வரைக்கும் ட்ராவல் ஆகுது. விக்ரமின் ஸ்டைலிஷ் நடிப்பும் அதிகம் பேசாத ஆனா மத்தவங்களை அதிகம் பேச வைக்கிற அவரின் உடல்மொழியும் ஆசம் ஆசம். மலேசியாவில் பழையா டானாகவும் அதற்கு முன் சோல்ஜர், கமோண்டா மாதிரி பொறுப்புல இருந்தவருமான விக்ரமை கொலைப் பண்ண ப்ளான் போடுது கிரிமினல் வித் போலீஸ் கூட்டணி. அந்தக் கூட்டணிக்குள் கூண்டுக்கிளி போல் மாட்டிக்கொள்கிறார் நாயகி அக்ஷரா. அக்ஷராவின் காதல் கணவர் அபி கதற விக்ரம் ஒவ்வொரு பிரச்சனைகளையும் முடித்து விட்டு வில்லன்களை சிதறடித்தால் கடாரம் கொண்டான் என்ட்கார்டு.
பட்டாசு பத்த வைக்கும் போது ஒரு பொறுமை இருக்குமே அப்படி ஒரு பொறுமை படத்தின் ஆரம்ப ஏரியா. அப்புறம் பட்டாசு பத்திக்கிட்டதும் பறக்குமே அப்படியொரு ஸ்பீடு. நாசர் மகன் அபிஹாசன் அளவுக்கு கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசன் நடித்து விடுவாரா? என்ற கேள்வியோடு போனால் நாசர் மகனை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்து நிற்கிறார் அக்ஷரா. அப்பாவின் அத்தனை நுணுக்கமும் கண்ணுக்குள் இருக்கிறது பொண்ணுக்கு. மேலும் இதர நடிகர்களில் யாரும் குறை வைக்கவில்லை. விக்ரம் தன் ஒற்றைப் பார்வையில் மொத்தபேரையும் மறக்கடிப்பதெல்லாம் வெறித்தனம்.
ஒளிப்பதிவும் இசையும் ஹாலிவுட்டுக்கு சவால் விடும் அளவுக்கு தரம்..ஆகத்தரம். மலேசிய போலீஸ் எல்லாம் மண்டைக்கு வெளியே தான் யோசிப்பாங்க போல என்னும் பூ சுத்தும் சமாச்சாரங்கள் படத்தில் அங்கங்கே இருக்குது. ஆனாலும் காட்சிக்கு காட்சி படத்தின் மேக்கிங் நம்மை மயக்குது. அபி அக்ஷரா காதல் கணவன் மனைவியா வர்றாங்க. அவங்க சம்பந்தப்பட்ட காட்சிகளில் கண்ணீர் பொங்கிருக்கணும். ஆனா யாருக்கும் அது வந்தா மாதிரி தெர்ல. (தண்ணீர் பஞ்சத்தைத் தொடர்ந்து கண்ணீர் பஞ்சமோ என்னாவோ? அந்த இடத்தை இயக்குநர் கனம் பண்ணிருக்கலாம். விக்ரம் வித் அபி ரிலேசன்ஷிப் வர்றதுக்குள்ள படமும் முடிஞ்சிடுது. விக்ரமிற்கு ஜோடி இல்லன்ற குறையே தெரியாதளவிற்கு அவர் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கு. ஆனால் அவர் தப்பு செய்றதுக்கான காரணங்கள் என்னன்னு படத்துல எங்கேயுமே காணோம்.
சின்னச் சின்னச் சறுக்கல் இருந்தாலும் கடாரம் கொண்டான் ஒரு அசூர பாய்ச்சல் தான்!