Tamil Movie Ads News and Videos Portal

ஜீனியஸ் விமர்சனம்

ஐடி பசங்களுக்கு மெண்டலி பிரசர் வந்தா தீர்வுக்கு ஜாஸ்மினைத் தேடித்தான் போகணுமா? ஐடி பாய்ஸ் எல்லாரும் அந்தமாதிரி முடிவை எடுத்தா அப்போ தரமணி தாய்லாந்தா மாறிடுமே அய்யா? ஜீனியஸ் படம் பார்த்ததும் இந்தக் கேள்வி சும்மா விளையாட்டாத் தான் தோணிச்சிது. ஆனா விளையாட்டும் வினையாகும் காலம் தானே இது. குழந்தைகளை படி படி என்றால் மட்டும் போதாது. அது அவர்களை போதாத காலத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்பதையும், வாழ்க்கை என்பது மகிழ்வுக்குத் தானே ஒழிய மானாவரியாக வேலை பார்ப்பதற்கு அல்ல என்பதையும் சொல்லி இருக்கிறது ஜீனியஸ்.

சொல்லப்பட்ட விதம் முக்கியமல்ல சொன்ன விசயம் தான் முக்கியம் என்றால் இந்தப்படம் பாஸ்மார்க். ஆனால் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்தாக இருந்தாலும், ட்ராபிக் ராமசாமியாக இருந்தாலும் சொன்ன விசயத்திற்காகவா ரிசல்ட் கொடுப்பாங்க..சொன்ன விதத்திற்கு தானே?
அங்கு தான் தான் ஒரு ஜீனியஸ் என்பதில் லேசாக சறுக்கி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். ஹீரோவுக்கான பிரச்சனைக்கு தீர்வு அவன் மனதிலும் சுற்றி நடக்கும் நிகழ்விலும் தான் இருக்கிறது என்பதை அல்லவா படம் காட்டி இருக்க வேண்டும்? சோ சட்.

கத்துவது மட்டும் நடிப்பு அல்ல என்பதை கற்றுக்கொண்டு தான் கத்துக்குட்டி அல்ல என்பதை முதல் படத்திலே நிரூபித்து இருக்கிறார் அறிமுக ஹீரோ ரோஷன்.
இது ஆரம்பம் தான் பாஸ். செண்டிமேண்ட் ஏரியாவையும் ரொமான்ஸ் ஏரியாவையும் இன்னும் மேம்படுத்துங்க.
ஹீரோயின் வொர்த்து. ஆடுகளம் நரேன் களம் புரிந்து நடித்து இருக்க, ஆடுகளம் ஜெயபாலன் தாத்தா கேரக்டரில் அசத்தி இருக்கிறார். க்ளைமாக்ஸில் அவர் டவுசர் தெரிய வேட்டியை தூக்கும் போது, பேட்டக்காரன் கண்ணுல வந்து போறானா இல்லியா!!

வில்லாதி வில்லன் ரேஞ்சுல கதையில ஒரு வில்லன் கேரக்டர் வருது. படச்சாம்பார்ல அது கேரட் அளவுக்கு கூட ஒட்டல. பாட்டை மட்டும் கம்போஸ் பண்ணிக் கொடுத்துட்டு யுவன் சங்கர் ராஜா, பேக்ரவுண்ட் இசைக்கு ஸ்பாட்டுக்கே வரலபோல. பேக்ரவுண்ட் ஸ்கோர்ல அவ்ளோ மெத்தனம். ஒளிப்பதிவு கிராமத்துக் காட்சிக்கு ஏத்தமாதிரியும் நகரத்துக்கு ஏத்த மாதிரியும் சரியா இருக்கு.
ஒண்ணே முக்கால் மணி நேர படம் தான் அதனால் எடிட்டரை வணங்குவோமாக..

திடீர் வில்லன், திடீர் காதல், திடீர் தீர்வு என சில விசயங்கள் திடீர்னு வந்தாலும் அது எந்த அதிர்வையும் ஏற்படுத்தாம இருப்பது சின்ன ட்ராபேக். ஆனால் பெற்றோருக்கும் இளைஞர்களுக்கும் நல்ல மெசேஜ் சொல்ற படம் என்பதால் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் ஓடிப்போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க ஜீனியஸ்.