கமர்சியல் முற்றத்தில் தலயை வைத்து சிவா போட்டிருக்கும் செண்டிமெண்ட் கோலப்பொடி இந்த விஸ்வாசம். கொடுவிளார் பட்டியின் சிங்கம் தூக்குதுரைக்கு யாரையும் தூக்கி அடிக்கிறதுனா இஷ்டம். கொடுவிளார்பட்டிக்கு மருத்துவராக வரும் நயன்தாரா தலயின் அதிரடிக்கு பயந்தாரா ஆகாமல் அவரை அன்புப்பொடி போட்டு மயக்க, காதலாகி கல்யாணமாகி குழந்தையாகி பின் தலயோடு சண்டையாகி பிள்ளையோடு நயன் மும்பை பறக்க படம் ஸ்டார்ட்..ஆமா இப்ப தான் ஸ்டார்ட்டே.
தல..வெள்ளை முடியிலும் மனுசன் கொள்ளை அழகு. க்ளோசப் காட்சிகளில் மட்டும் மேக்கப் மேட்டரில் கொஞ்சம் கவனம் வேண்டும் தல. நீண்ட காலத்திற்குப் பிறகு வித்தியாசமான அஜித்தை திரையில் பார்க்கும் போது ஒரு புது அனுபவம் கிடைக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறித்தாலும் செண்டிமெண்ட் காட்சிகளில் தல தலயாய நடிப்பை அள்ளித் தெளிக்கிறார். இது நயன்தாரா காலம். மாஸ் ஹீரோ படமாக இருந்தாலும் நான் மாஸுக்கு எல்லாம் மாஸ் என்ற ரேஞ்ச் அவர் வர்ற ஏரியா. குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு அவர் அஜித்தை டீல் பண்ணும் இடம் இருக்கே அதகளம்.
யோகிபாபு, தம்பிராமையா, ரோபோசங்கர், விவேக், கோவைசரளா காமெடி பண்ணுவதற்காக மல்லுக்கட்டுவதைப் பார்க்கும் போது நமக்கே பாவமாக இருக்கிறது. இவர்களை விட தல பேசும் ஒருசில டைமிங் சிரிக்க வைக்கிறது.
12 வருசத்துக்கு பின்னாடி மனைவியைத் தேடிப்போறவர் அப்படியே முப்பது வருசத்துக்கு பின்னாடி போனவர் மாதிரி இருக்கார். ஆனா நயன்தாரா பனிரெண்டு வருசத்துக்கு முன்னாடி இருந்த மாதிரியே இருக்காங்க. (காரணம் புரியல?)
அவ்வை சண்முகி படத்தை பல இடங்கள் நினைவூட்டுது. அப்பாவை அங்கிள்னு அழைக்கச் சொல்வது, கணவரை வேலைக்காரனாக டீல் பண்ணுவது என பார்த்துச் சலித்த உவ்வேக்கள் தான். ஆனால் ஸ்க்ரீனில் அதைச் செய்வதும் செய்யச் சொல்வதும் நயன்தாரா அஜித் என்பதால் பழைய சோறாக இருந்தாலும் பால்சோறுன்னு சாப்பிடுற மனநிலை.
அரைச்சித் துவைச்ச கதையை மின்னல் போன்ற திரைக்கதையால் பின்னியெடுத்திருக்கலாம். அங்கு தான் சிவா கோட்டை விட்டுள்ளார். லாஜிக் என்ற ஒன்று மருந்துக்கும் இல்லை.
வசனங்கள் மட்டும் வழக்கம் போல் மாஸ் காட்டுகின்றன. வெற்றியின் ஒளிப்பதிவு தரம். இமானின் இசை கை விடவும் இல்லை கை கொடுக்கவும் இல்லை.
பக்கா மாஸாக அறிமுகமாகும் கதை பக்கா செண்டிமெண்ட் படமாக மாறும் தருணம் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம். தந்தை மகள் உறவைப்பற்றிய கதைகளை எப்போதும் நாம் பற்றிப்பிடித்து கொண்டாடுவோம். விஸ்வாசத்தை பலமாக பற்றவும் முடியவும் இல்லை..அதே சமயம் விடவும் முடியவில்லை.முடிவாக நம்மைக் கவர்ந்த விசயம் படத்தின் முடிவில் சொல்லப்படும் அட்வைஸ்.
“சாகப்போற நேரத்துல சங்கரா சங்கரான்னு சொல்லி என்ன பிரயோசனம் என்பார்கள்” விஸ்வாசத்தைப் பொறுத்தவரை நல்லவேளை அந்த வேளையிலாவது சொன்னார்களே!