AK ரசிகர்களுக்கு ஒரு சம்மர் தீபாவளி குட்பேட் அக்லி! அப்போ மற்றவர்களுக்கு?
டான் ஆக இருக்கும் தன் கணவரை தவறுகளைத் துறந்து திருந்தி வாழச்சொல்கிறார் மனைவி திரிஷா. மனைவி சொல்லே மந்திரம் என முடிவெடுக்கும் அஜித், செய்த தவறுகளுக்காக சிறை செல்கிறார். 18 ஆண்டுகள் கழித்து சிறை மீளும் அவர், தன் 18 வயது மகனைக் காணச் செல்கிறார். ஆனால் மகன் மூலமாக அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அதிர்ச்சி என்ன.. அதிலிருந்து அஜித் எப்படி மகனை மீட்டெடுக்கிறார் என்பதாக கதை விரிகிறது
ஒன்மேன் ஆர்மியாக AK எல்லா சீனுமே டபுள் Ok என்றளவில் மாஸ் காட்டியுள்ளார். ‘அஜித்-ஐ புகழ்வது ஒன்றே உங்களின் வேலை’ என்று சொல்லியே அனைத்து நடிகர்களையும் புக் செய்திருப்பார்கள் போல. ஸ்கிரினில் தெரியும் அஃறினை பொருட்கள் தவிர மீதி அனைவரும் AK புராணம் பாடுகிறார்கள். திரிஷா ரொமான்ஸ் & செண்டிமெண்ட் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். அஜித்திற்கு அடுத்து படத்தில் ஸ்கோர் செய்வது அர்ஜுன் தாஸ். தரமாக நடித்துள்ளார். ஜாக்கி ஷெராப், பிரபு, பிரசன்னா உள்பட மற்றவர்கள் எல்லாம் ஒப்புக்குச் சப்பாக படத்தில் இருக்கிறார்கள். எந்தக் கேரக்டரும் சிறப்பாக எழுதப்படவில்லை
படத்தின் விஷுவலில் குறையே வைக்காமல் பம்பரமாகச் சுழன்றுள்ளார் கேமராமேன். அஜித்திற்கான பில்டப் ஷாட்ஸ் எல்லாம் தாறுமாறு ரகம். ஜிவி பிரகாஷிடம் இருந்து இவ்வளவு இரைச்சலை எதிர்பார்க்கவில்லை. பாடல்கள் ஒகே ரகம். எடிட்டர் படத்தை ரீல்ஸ் மெட்டிரியலாக மாற்றி எடிட் செய்துள்ளார்.
படத்தில் திரைக்கதை புதுமையான காட்சிகள் என்று மருந்துக்கு கூட இல்லை. அஜித் மேல் ரசிகர்கள் வைத்துள்ள விஸ்வாசத்தை நம்பி பல உப்புமா காட்சிகளை வலிமையோடு அமைத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். காட்சிக்கு காட்சி அவரின் விடா முயற்சி ரசிகனை வைப் செய்கிறது. ஆனால் காமன் ஆடியன்ஸ் தியேட்டருக்குள் ஆமை ஓட்டுக்குள் புகுந்த ஆக்சிஜன் போல அமைதியாகி விடுகிறார்கள். But விடா முயற்சியில் அயர்ச்சியான அஜித் ரசிகனை தண்ணீர் தெளித்து ‘தல’ உதற வைத்த வகையில் ஆதிக் ரவிச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார்
குட்பேட் அக்லி- ஒன்லி தல புராணம்
2.75/5
-வெண்பா தமிழ்