வணிக நோக்கத்தோடு எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் மனிதம் பேசுவதே இல்லை. அதனால் இப்போது மனிதம் பேசும் படங்களை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அந்தக் கட்டாயத்திற்கு கட்டியம் கூறியுள்ளது கன்னிமாடம்.
சாதி மாறி திருமணம் செய்ததால் சாதிவெறியர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள சென்னை வருகிறார்கள் கதிரும் மலரும். கருகிய உள்ளம் கொண்டவர்களிடம் இருந்து அந்த ஜோடியைக் காப்பாற்றும் பொறுப்பை ஹீரோ ஏற்கிறார். அதன்பின் பல பாலபாடங்களோடு நிறைவடைகிறது கன்னிமாடம். இந்தக்கதைக்குள் ஹீரோவின் குடும்பத்திலும் ஒரு ஆழமான ஆணவக்கொலை சம்பவம் ஒன்றும் இருக்கிறது.
பெரியார் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டுபவராக ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் நமக்குள் அழகாக ஒட்டிக்கொள்கிறார். தொட்டாலே வெட்டிவிடும் ஷார்ப்பான கேரக்டரில் சாயாதேவி அசத்தி இருக்கிறார். ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் விஷ்ணு ராமசாமி நல்ல தேர்வு. ஆடுகளம் முருகதாஸின் அதகள பன்ச் லைன்கள் ரணகளத்திலும் கிளுகிளுப்பு. சூப்பர் குட் சுப்பிரமணியன் ஒரு Feel good பெர்ஃபாமன்ஸை கொடுத்துள்ளார். வல்லீனா பிரின்ஸ் கேரக்டர் பெரிய வலுவில்லா விட்டாலும் அவரும் நல்ல நடிப்பையே தந்துள்ளார். இரண்டாம் பாதியெங்கும் நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா மிகச் சிறப்பாக நம்மை கலகலக்க வைத்து இறுதியில் கலங்கவும் வைக்கிறார். இப்படி நடிகர்கள் லிஸ்டில் இடம்பெற்றுள்ள அனைவருமே கன்னிமாடத்தில் முதல் கலசமாய் மின்னுகிறார்கள்.
பின்னணி இசை ஒளிப்பதிவு இரண்டும் போஸ் வெங்கட் திரைக்கதைக்கு கூடுமான பலத்தைச் சேர்த்துள்ளன. பின்பாதியில் அழகாக தீட்டப்பட்ட கவிதை போல் போகும் படத்தை முன்பாதியிலும் அப்படியே கொண்டு போயிருக்கலாம். சின்னச் சின்ன தொய்வு முன்பாதியெங்கும். வசனங்களில் சில இடங்களில் நச்சென இருக்கிறது. சில இடங்களில் உச் கொட்ட வைக்கிறது.
உதாரணத்திற்கு தான் திருமணம் செய்து அழைத்து வந்த பெண்ணையே கதிர் கேரக்டர் “அவ தாழ்ந்த சாதி” என்று சொல்வதெல்லாம் மன்னிக்க முடியா குற்றம் போஸ் சார். அதே டயலாக்கை பிரியங்காவும் “அவ கீழ் சாதின்னு பார்க்காம” என்று ஒரு இடத்தில் பேசுகிறார். மேலும் ஹீரோவே ஒரு இடத்தில் “அவங்க தாழ்ந்த சாதி” என்கிறார் லைட்டா உறுத்தும் இடங்கள் இவை. யாரையும் தாழ்ந்த சாதி என்று சொல்லும் உரிமையை நமக்கு யார் கொடுத்தது? சமுத்துவமும் மனிதமும் பேசும் படத்தில் இப்படியான வசனங்கள் வைத்தது பெரிய திருஷ்டிப் பொட்டு..இந்த இடத்தில் ஒரு கேள்வி வரும். சமூகத்தால் வர்க்க ரீதியாக கீழ் மட்டத்தில் இருப்பதாய்ச் சொல்லப்படும் மக்களை ஒரு பாமர கேரக்டர் பின் எப்படி குறிப்பிடும்?
சரியான கேள்வி தான். அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல. தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூற வேண்டும். அப்படித்தான் கூறி இருக்க வேண்டும்.
பெருநிறைகள் இருக்கும் இடத்தில் சிறுகுறைகள் இருப்பது இயல்பு தான். படத்தின் உள்ளடக்கம் நியாயமாக இருப்பதாலும் இன்றைக்கு சமூகத்திற்குத் தேவையான படம் என்பதாலும் கன்னிமாடத்தைக் காணத்தான் வேண்டும்!
-மு.ஜெகன்சேட்