Tamil Movie Ads News and Videos Portal

நான் சிரித்தால்- விமர்சனம்

பொட்டு வெடியை வெடிச்சாலும் வெடி பத்த வைக்கிற ஆளு பெரியாளுன்னா அது ராக்கெட்டா தானே தெரியும்! தம்மாத்துண்டு கதைதான் நான் சிரித்தால். சுந்தர் சி தயாரித்திருக்கிறார். ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார் என்றதும் கொஞ்சம் பெருசா தெரியிது படம்.

சோகத்திலும் பயத்திலும் சிரிக்கும் நோய் கொண்ட ஒருவனுக்கு வாழ்க்கையில் நேரும் சம்பவங்கள் தான் கதை. கேட்கும் போது சுவாரசியத்தை ஏற்படுத்தும் கதை திரையில் திரைக்கதையாக ஜொலிக்கும் போது சற்று பொலிவை இழந்துள்ளது.

 

ஹிப்ஹாப் ஆதிக்கு இப்படம் நடிப்பிற்கான ஸ்கோப்பை விட சிரிப்பிற்கான ஸ்கோப்பை அதிகமாக்கி கொடுத்துள்ளது. அவரும் கூடுமான வரை சிரித்து வைத்துள்ளார்..நாயகி ஐஸ்வர்யா மேனன் அழகான இருக்கிறார். அளவாக நடிக்கிறார். வில்லன்கள் கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, அல்லக்கைகள், ஷாரா முனிஷ்காந்த் சிரிப்பிற்கு கியாரண்டி தருகிறார்கள்.

படத்தின் பின்னணி இசையை ஹீரோவான ஹிப்ஹாப் ஆதியே அடித்துள்ளார்..ஹீரோவின் இசை படத்தில் பல இடங்களில் வில்லனாகத் தான் இருக்கு. அதுவும் முன்பாதியில் மட்டும் நான்கு பாடல்கள் என்பதெல்லாம் தெய்வமே…

சின்ன விசயத்தை நறுக்குன்னு சொல்லாமல் தொளதொளவென இழுத்தடிப்பது தான் பெரிய கடுப்பு. இருந்தாலும் படத்தின் பின்பாதி பேராறுதல்..அதுவும் அந்தக் கல்யாண மண்டப காமெடி காட்சிகள் மட்டும் படத்தைக் காப்பாற்றி இருக்கிறது. படமெங்கும் சிரிக்க முடியாவிட்டாலும் படம் முடியும் போது சிரிக்க வைத்து விடுகிறார்கள். அதற்காக வேண்டுமானால் ஒரு வாட்டி பார்க்கலாம்.
-மு.ஜெகன்சேட்