Tamil Movie Ads News and Videos Portal

விடாமுயற்சி- விமர்சனம்

முன்னாள் ‘காதல் மன்னன்’ அஜித் காதலுக்கான இலக்கணத்தை தேடலோடு சொல்லித் தருவதே விடாமுயற்சி

அஜர்பைஜானில் பணி செய்தபடியே பன்னிரெண்டு ஆண்டுகளாக மனைவி திரிஷாவோடு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஹீரோ அஜித்குமார். திடீரென திரிஷா அஜித்திடம் டிவோர்ஸ் கேட்கிறார். அதற்கான காரணம் என்ன? என்பதும், இடையில் அர்ஜுன் கேங்கால் கடத்தப்படும் திரிஷா என்ன ஆனார்? என்பதும் படத்தின் திரைக்கதையாக விரிகிறது

பனியில் விரிந்த வெள்ளை பூ போன்ற மென் தாடியோடு அஜித் அழகாக இருக்கிறார். திரிஷாவுடன் ஆன காதல் காட்சிகளில் ஆங்காங்கே விண்டேஜ் அஜித். அந்த அஜித்-ஐ இன்னும் அதிகமாக காட்டியிருக்கலாம். குற்றவுணர்ச்சி, அலுப்பு, அன்பு என அத்தனை உணர்வுகளையும் தன் நடிப்பில் கொண்டு வந்து அசத்துகிறார் திரிஷா. அர்ஜுன் கெட்டப் மற்றும் அவரது கேரக்டர் பகீர் ரகம். அதைச் சிறப்பாகச் செய்துள்ளார். இப்படியான நெகட்டிவ் ரோலுக்கு ரெஜினாவைத் தவிர யாரும் சூட் ஆக மாட்டார்கள். அசத்தியுள்ளார். ஆரவ், ரம்யா உள்ளிட்ட கேரக்டர்கள் நச் என முத்திரைப்பதிக்கிறார்கள்

படத்தின் நெத்திப் பொட்டு என ஒளிப்பதிவைச் சொல்லலாம். அஜர்பைஜான் சந்து பொந்து, வளைவு நெளிவு என அனைத்தையும் தன் அழகான ப்ரேமிற்குள் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர். அனிருத் மாஸ் மொமெண்ட்ஸ் வரும் காட்சிகளில் எல்லாம் தானொரு AK fan என்பதை நிறுவுகிறார். பாடல்களும் சிறப்பு

அஜித்திற்கு இப்படியொரு செட்டில் ஆன படமா? என சிலர் வியப்படையலாம். ஆனால் அஜித் அதை அரை மணி நேரத்தில் கடந்து போக வைத்துவிடுகிறார். இன்றைக்கு கணவன் மனைவிக்கான உறவிற்குள் இருக்க வேண்டிய உண்மையான நேசத்தை அஜித் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்துப் பேசியுள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. வேக வேகமாக காட்சிகள் நகர வெண்டும் என்று நினைக்காமல், மெதுவாக நகர்ந்தாலும் அக் காட்சிகளால் நம் இதயம் மலர வேண்டும் என்று நினைப்பவர்கள் விடா முயற்சியை தொடாமல் இருக்காதீர்கள்
3.25/5
-வெண்பா தமிழ்