“ஆணும் பெண்ணும் காதலில்லாமல் பழகிக்கலாம். அது ஆயுள் முழுதும் கலங்கப்படாமல் பார்த்துக்கலாம்” – பாடலாசிரியர் சினேகன் எழுதிய இந்த வரிகள் தான் 2K love story படத்தின் ஒன்லைன்
ஹீரோ ஜெகவீர்-க்கும் ஹீரோயின் மீனாட்சிக்கும் பேரன்பு பொங்கும் நட்பு. “இவர்கள் இருவர் வாழ்வில் வேறொருவர் வந்தால், இருவருக்கும் ஈகோ பொங்கும். அந்த ஈகோவிற்குப் பின்னால் இருப்பது நட்பு அல்ல காதல்” என்கிறார் ஒரு 90 கிட்ஸ். அவரது கணிப்பு சரியா? என்பதாக பயணிக்கிறது கதை! புது வசந்தம், பிரியமான தோழி, பிரியாத வரம் வேண்டும் ஆகிய படங்கள் நினைவிற்கு வருகிறதா? வரும்..வரணும்
ஹீரோவாக ஜெகவீர் முதல் படத்திலே ஓகே மார்க் வாங்குகிறார். சிற்சில எமோஷ்னல் காட்சிகளில் கூட ஸ்கோர் செய்ய முயற்சித்துள்ளார். நாயகி மீனாட்சி அழகிலும் சரி, நடிப்பிலும் சரி அசத்தல். க்ளைமாக்ஸ் பக்கத்தில் வரும் ஒரு பாடலில் பிரமாதமாக தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பால.சரவணன் கடுமையாக முயற்சித்து சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். சிங்கம் புலி வரும் போர்சன் அனைத்துமே பட்டாசு.
ஒளிப்பதிவாளர் ஒரு சின்ன படத்தை பெரிய படமாக காட்ட போராடியுள்ளார். இசை அமைப்பாளர் டி.இமானிடம் இருந்து இன்னும் நல்ல பாடல்களை வாங்கியிருக்கலாம். பின்னணி இசை பரவாயில்லை
“நீ 90 கிட்ஸா..நீங்க அழிஞ்சிருங்க”
“நாங்க பொறந்ததால தான்டா நீங்க பொறந்தீங்க 2K கிட்ஸ்ங்களா” போன்ற வசனங்கள் சின்னதாக ஈர்க்கிறது.
படத்தின் திரைக்கதையை பின் சீட்டில் இருப்பவர் கேசுவலாக சொல்லிவிடலாம். அந்தளவிற்கு ரொம்பவே பழக்கப்பட்ட திரைக்கதை. படம் டைட்டிலுக்கும் நியாயம் செய்யவில்லை. நட்பைப் பற்றிச் சொல்லும் படத்திற்கு எதற்கு காதல் டைட்டில்?
படம் வழக்கமான பார்மட்டில் இருந்தாலும் பெரிதாக போர் அடிக்கவில்லை. இன்னும் தரமாக திரைக்கதையில் இன்ட்ரெஸ்டிங்-ஐ சேர்த்திருந்தால் 2Kவிற்கு Ok சொல்லிருக்கலாம்..
ஜஸ்ட் மிஸ்..
இருப்பினும் ஒரு ப்ளேன் கிஸ்
2.75/5
-வெண்பா தமிழ்