ஒத்த ஓட்டுப் பெற்ற அரசியல்வாதி முத்தையா முடிவில் மொத்த ஓட்டையும் பெற்றாரா?
ஹீரோ கவுண்டமணிக்கு மூன்று தங்கைகள். மூவருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள் உள்ள ஒரே வீட்டில் மாப்பிள்ளைப் பார்க்கிறார். தங்கைகள் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் காதலிக்கிறார்கள். அண்ணன் கவுண்டமணியை ஏமாற்ற தங்கைகள் ஒரு வழி கண்டு புடிக்கிறார்கள்? அந்த வழி வொர்க்கவுட் ஆனதா? என்பது ஒரு கதை. ஒரு கட்சியில் மாவட்டச் செயலாளராக இருக்கும் கவுண்டமணி ரவிமரியா, யோகிபாபு போன்ற அரசியல் வாதிகளை மீறி எப்படி ஜெயிக்கிறார் என்பது மற்றொரு கதை
கதையின் நாயகராக கவுண்டர் மகான். வயதோதிகம் அவரின் குரலிலும், நடை உடையிலும் தெரிவதால் நம்மால் அவர் அடிக்கும் பன்ச்களுக்கு பரிதாபம் தான் பட முடிகிறது. அதையும் மீறி சில இடங்களில் விண்டேஜ் கவுண்டமணி தெறிக்க விடுகிறார். மூன்று தங்கைகள் அவர்களின் ஜோடி இளைஞர்கள் அனைவரும் நடிப்பில் பாஸ்மார்க் வாங்குகிறார்கள். யோகிபாபு கவுண்டர் கூட்டணி ஒருசில இடங்களில் சியர்ஸ் சொல்ல வைக்கிறது. சிங்கமுத்து கூல் சுரேஷ் கூட்டணி சில காட்சிகளில் அதகளம் செய்துள்ளது
இசை படத்திற்கு ஆகுமான உதவியை செய்துள்ளது. கடைசியில் இடம் பெறும், “அம்மா தாயே” பாடல் அட்டகாசம். ஒளிப்பதிவாளர் தன்னால் முடிந்தளவு பட்ஜெட் தெரியாமல் உழைத்துள்ளார்
இரு கதைகள் போல தங்கைகளின் கல்யாண அத்தியாயம், கவுண்டமணியின் அரசியல் அத்தியாயம் என பயணிக்கிறது படம். இதில் கல்யாண அத்தியாயமே இன்ட்ரெஸ்டிங்! அரசியல் அத்தியாயத்தை இன்னும் நையாண்டியோடு காட்சிப் படுத்தியிருக்கலாம். ரொம்ப பழைய பார்மட் திரைக்கதை என்பதால் மல்டிபிள் ஆடியன்ஸிடம் முத்தையா எவ்வளவு ஓட்டு வாங்குவார் என்று தெரியவில்லை. டெபாசிட் கிடைக்க வாய்ப்பிருக்கு
2.5/5
-வெண்பா தமிழ்