Tamil Movie Ads News and Videos Portal

அன்னபூரணி- விமர்சனம்

உணவுகளின் அரசி என்ற பொருள் தரக்கூடிய பெயர் தான் அன்னபூரணி. சிறு வயது அன்னபூரணிக்கு தான் பெரியவளாகும் போது இந்தியாவிலே பெரிய செப் ஆகவேண்டும் என்பது பெருங்கனவு. அதற்கு தடை போடுகிறார் தந்தை அச்யூத்குமார். அவர் தடை போடுவதற்கான காரணமாக ஆச்சாரம் இருக்கிறது. “நான் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு நெய்வேத்தியம் பண்றவா..எம்பொண்ணு சமையல்காரியாகி நான்வெஜ்லாம் சமைச்சா கோத்திரம் சாத்திரம் என்னாகிறது” என்று அவர் விசனப்பட, அன்னபூரணி அதற்கு சில வசனம் பேச படமும் கதையும் வளர்கிறது. மேலும் அன்னபூர்ணி செப் ஆனபின் இன்னுமொரு பிரச்சனை எழ..முடிவில் அன்னபூரணி எப்படி உணவுகளின் அரசியாக உருமாறினார் என்பதே கதை

நயனுக்கு நடிப்பில் குறை சொல்ல முடியாத படம். அதேநேரம் மாயா, அறம் போன்ற படங்களில் நடிப்பில் அவர் தொட்ட உயரத்தை இந்தப்படம் எட்டவில்லை. ok கொடுத்த கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். அவருக்கு அடுத்ததாக அப்பா கேரக்டரில் நடித்துள்ள அச்யூத்குமார் சிறப்பான தேர்வு. ஜெய் நயனுக்கு ஆறுதல் அளிக்கும் கேரக்டரில் இயல்பாக பொருந்துகிறார். கார்த்திக்குமார் வில்லனத்தை விட சத்யராஜின் குணச்சித்திர கேரக்டர் ஈர்க்கிறது.

தமனின் இசையில் பாடல் சுமாருமில்லை சூப்பருமில்லை. பின்னணி இசை எமோஷ்னல் காட்சிகளில் வொர்க்கவுட் ஆகியுள்ளது. சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவில் விஷுவல்ஸ் எல்லாமே ரிச் ரகம்! எடிட்டிங் ஷார்ப். CG work பல இடங்களில் பல்லிளிக்கிறது.

ஒரு அஹ்ரகாரத்துப் பொண்ணு, நான்வெஜ் சாப்பிடுறது பற்றிய டிஸ்கசனில் துவங்கும் கதை அப்படியே உணவு அரசியலுக்குள் செல்வது சுவாரஸ்யம். இந்து மதத்திற்கும் இந்து கடவுகள்களுக்கும் நான்வெஜ் உணவுடன் உள்ள தொடர்பைப் பற்றி ஒரு முஸ்லீம் கேரக்டர் பேசும் விதம் படத்தின் ஹைக்கூ மொமெண்ட். பின்பாதியில் நாம் எதிர்பார்க்கும் எல்லா சீன்களும் வசனங்களும் படத்தில் அப்படியே வருவதால் சின்னதாக அலுப்பு வருகிறது. நல்ல கதைக்களத்தை யோசித்த இயக்குநர் திரைக்கதையில் சற்று மெனக்கெட்டிருந்தால் இந்த அன்னபூரணி இன்னும் பசியாற்றியிருப்பாள். அளவுச் சாப்பாடு என்றாலும் சுவை இருந்தது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்