Tamil Movie Ads News and Videos Portal

டகால்டி- விமர்சனம்

பல தடவை பார்த்த கதை என்றாலும் சந்தானம் இருப்பதால் கமகம ஏரியா அதிகம் இருக்கிறது டகால்டியில். துறுதுறு சந்தானம் பணத்திற்காக எதையும் செய்பவர். காமவெறி வில்லனுக்கு நாயகி தேவைப்பட அசைன்மெண்ட் சந்தானத்திற்கு வருகிறது. பொய்பேசி நாயகியை கைப்பிடித்து வில்லனிடம் ஒப்படைக்கிறார். அப்புறம் என்னானது என்பது தான் டகால்டி.

 

சந்தானம் வராத மாஸை வா வா என்கிறார். நாமும் தேமே என்று அதை ஏக்கமாக பார்க்க வேண்டிய இருக்கிறது. எப்பவாவது அவர் அடிக்கும் பஞ்ச் மட்டும் தான் படத்தை பஞ்சராக்காமல் காப்பாற்றியுள்ளது. நாயகி ரித்திகா சென் விளையாத கத்திரிக்கா போல் மெச்சூட் இன்றி நடித்தாலும் ஓ.கே ரகம் தான். வில்லன் தருண் அரோரா-வை விட கடைசியில் வரும் பிரம்மானந்தம் கவனம் ஈர்க்கிறார். முதல் பத்து நிமிடம் தலை காட்டும் யோகிபாபு தான் க்ளைமாக்ஸில் தல போல படத்தைக் காக்கிறார்.

படத்தின் முன்பாதி எல்லாம்,
“தம்பி இங்க வா…வந்து லட்டு வாங்கிட்டுப் போன்னு கூப்பிட்டு வச்சி குத்துனா எப்படி இருக்கும். அப்படி இருக்கு.

 

பாடல்களும் பின்னணி இசையும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அது தூக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது ஆறுதல். ஒளிப்பதிவு எடிட்டிங் ஓரளவு கவனித்து ரசிக்க வைக்கிறது.

படத்தின் முன்பாதி ஆமை வேகம் என்றாலும் பின்பாதி மின்னல் வேகம்.குறிப்பாக க்ளைமாக்ஸ் அல்டிமேட் காமெடி. அந்த ஒன்றிற்காக மட்டும் டகால்டியை ஒருவாட்டி பார்க்கலாம்

-மு.ஜெகன்சேட்