கல்லூரிக் காதல் என்ற வகைப்படங்கள் எப்போதும் கலகலப்பிற்கு பஞ்சம் விளைவிக்காதவை. உற்றான் படமும் அப்படியொரு முயற்சி தான்…
நாயகன் ஞான சுதாகர் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் தனி சாம்ராஜ்ஜியத்தையே நடத்தி வருபவர். அவருக்கு போலீஸ் அதிகாரி மகள் மீது காதல் வருகிறது. வேறோர் பிரச்சனையும் அவரைத் துரத்த, காதலும் ஒரு கட்டத்தில் பிரச்சனையாக உற்றான் எப்படி வெற்றியைப் பெற்றான் என்பது தான் மீதிக்கதை. படத்தின் உருவாக்கத்தில் நிறைய தடுமாற்றங்கள் இருக்கிறது. படத்தின் திரைக்கதையில் இருக்கும் தெளிவின்மை, காட்சியமைப்பில் இருக்கும் லோ குவாலிட்டி போன்ற விசயங்கள் படத்தைப் பின்னிழுக்கின்றன.
அறிமுக ஹீரோ ஞான சுதாகர் படத்தை என்கேஜாக வைத்திருக்கிறார். வசன உச்சரிப்பில் இருக்கும் நேர்த்தி, டான்ஸ் பைட்டில் இருக்கும் கவனம், ஒருசில எமோஷ்னல் காட்சிகளில் எட்டிப்பார்க்கும் நல்ல நடிப்பு என கவனிக்க வைக்கிறார். ஹீரோயின், ஹீரோவின் நண்பர்கள் கேரக்டர்கள் ஓ.கே ரகம்.
படத்தின் பின்னணி இசை, பாடல்களில் இசை அமைப்பாளர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கல்லூரிப்படம் என்பதால் 2K கிட்ஸை மனதில் வைத்து தெறிக்க விட்டிருக்க வேண்டாமா? ஒளிப்பதிவில் குறையேதும் இல்லை.
படத்தின் முன்பாதி ஜாலியும் பின்பாதி உருக்கமாகவும் செல்கிறது. க்ளைமாக்ஸ் வித்தியாச முடிவு என்றாலும் அந்தப் பிரச்சனையின் ஆழத்தை இன்னும் அலசி இருக்கலாம். சில தடுமாற்றங்கள் இருந்தாலும் இந்த உற்றான் புதுவரவு என்பதால் வரவேற்கலாம்
-மு.ஜெகன்சேட்