சில்லுக்கருப்பட்டியின் சுவையை இதயத்தில் பரவ விட்டபடியே இந்தவாரம் துவங்கி இருக்கிறது. முதலிலே சொல்லிவிடுவோம் ஒரு அட்டகாசமான சினிமா சில்லுக்கருப்பட்டி.
குப்பை அள்ளும் சிறுவன் கையில் கிடைக்கும் வைர மோதிரம், அதை உரியவளிடம் ஒப்படைக்க நினைக்கும் அவன் நேர்மை
ஐடி வேலை, ஜாலி மீம்ஸ் என வாழும் இளைஞனின் ஆண்குறியில் கேன்சர். அது தெரிந்தே அவன் மீது காதல் கொள்ளும் இளஞி,
வாழ்வில் ஒரு பகுதியாக உள்ள மனைவியை இழந்த 60 வயது முதியவர், திருமணமே செய்துகொள்ளாமல் 60 வயதுவரை வாழ்ந்துவிட்ட ஒரு பெண்மணி இருவருக்குள்ளும் முகிழ்க்கும் சமகால காதலுக்குள் கட்டமைக்க முடியாத ஒரு அன்பு,
அப்பார்ட்மெண்ட் மனைவியை வாழ்வில் அவளும் ஒரு டிப்பார்ட்மெண்ட் என்று பார்க்கும் கணவன், அவன் தனக்கு வெறும் ஆணாக இல்லாமல் கணவனாக இருக்க மாட்டானா? என்று ஏங்கும் மனைவி என நான்கு கதைகளும் நான்கு படங்களாக விரிகிறது. யெஸ் இது ஆந்தாலஜி மூவி.
கதையில் வரும் சம்பவங்களையும் சம்பவங்கள் சார்ந்து வரும் கதை மாந்தர்களையும் உற்று நோக்கினால்..எல்லோருமே அன்பை கோருகிறவர்களாக இருக்கிறார்கள். அந்தஸ்தை உயர்த்த செலவழிக்கும் நேரத்தை அன்பை உயர்த்தவும் செலவழியுங்கள் எனச் சொல்லும் சமுத்திரக்கனி சுனைனா போர்ஷனும் சரி, ஆணுறுப்பில் உள்ள விதைப்பந்தில் கேன்சரால் ஒன்றை இழந்தவனுக்கு “ஒரு பால் சிக்ஸ் அடிக்கப் போதும் பாஸ்” எனச்சொல்லி அவனை அள்ளிக்கொள்ளும் நாயகியும் சரி, உடம்பு தேடும் அன்புக்கு மட்டும் தான் காலவரையரையும் வயது வரையரையும் உண்டு. மனது தேடும் அன்புக்கு வயது ஒரு மேட்டரே கிடையாது என்பதைச் சொல்லும் அந்த முதிர்ந்த காதல் போர்ஷனும் சரி பேரன்பை அள்ளித் தெளிக்கிறது.
உணர்வுகளை உள்வாங்கி கதை எழுதி இருக்கிறார் இயக்குநர் ஹலிதா சமீம். நிச்சயமாக தமிழ்சினிமாவில் ஒரு அசுரத்தன இயக்குநராக கோலோச்சுவார்.
கதை சொல்லும் உணர்வுகளை புரிந்துகொள்ளும் வகையிலான பின்னணி இசை, படம் நகரும் இடத்திற்கு நம்மைப் பயணிக்க வைக்கும் ஒளிப்பதிவு இவை இரண்டும் சில்லுக்கருப்பட்டியில் தெளித்த தேன் துளிகள்.
முதல் எபிசோட்-இல் வரும் காக்காமுட்டை டைப் ஸ்டோரியில் மட்டும் கொஞ்சம் மிகைத்தன்மை எட்டிப்பார்த்தது. குப்பத்துச் சிறுவன் பணக்கார வீட்டுப் பெண், அவர்களுக்குள் பூக்கும் நட்பு என்பது எம்.ஜி.ஆர் கால சினிமா. ஆயினும் அந்தக்கதையின் முடிவை இன்னொரு இடத்தில் அந்தச் சிறுவன் டென்த் எக்ஸாம் எழுதப்போகிறான் என்பதாக முடித்தது தான் இயக்குநர் டச். செம்ம.
இங்கு எல்லோருக்குள்ளும் அன்பு இருக்கிறது..எல்லோருக்கும் அன்பு செய்யவும் தெரிகிறது. அதை இணையத்தில் பொய்யாக கொட்டுவதை விட தான் சார்ந்தவர்களின் இதயத்தில் மெய்யாக கொட்டுங்கள் என்கிறது சில்லுக்கருப்பட்டி. படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது
வாருங்கள் சில்லுக்கருப்பட்டியோடு அன்பு செய்வோம் ❤